Tuesday 14 August 2018

மாநில சுயாட்சியும்.. கிராம சுயாட்சியும்... பத்திரிகை செய்தி

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (14-08-2018)

தொடர்புக்கு : 88704 72179 / 87545 80270

 

அரசியல் காரணங்களா...? அடிப்படைத் தேவைகளா...? எது முக்கியம் ?

 

அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தமிழக அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக ஆகஸ்ட் 15 அன்று "கிராம சபை"யை முறையாக நடத்த வேண்டும்.

-  அன்று "மாநில சுயாட்சி" கேட்ட கட்சிகள் - இன்று "கிராம சுயாட்சி"க்குத் தடையாக இருக்கக் கூடாது. -   சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

 

Satta Panchayat Iyakkam urges the government to strengthen the local governance by forming "Ward Sabha" and conducting Grama Sabha properly as prescribed in the law. It also urges the ruling and opposition party to voice for Independence in Local governance.

 

72வது சுதந்திர நாளை, நாளை கொண்டாட இருக்கும் இந்தியா உலகம் போற்றும் ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் சாசனம்  எழுதியபொழுது இந்தியாவை பிரதிநிதித்துவ ஜனநாயகமாக  நமது தலைவர்கள் கட்டமைத்தார்கள்.  பிரதிநிதித்துவ ஜனநாயக நாடாக இருந்த இந்தியாவை பங்கேற்பு ஜனநாயகமாக மாற்ற வேண்டும் என்று நேரு முயற்சித்து தோற்று போனார். நேருவிற்கு பின்னால் வந்த பல பிரதமர்கள் (குறிப்பாக ராஜிவ் காந்தி ) முயன்று சாத்தியப்படாத விஷயத்தை நரசிம்ம ராவ் சாதித்து காட்டினார். வரலாற்று சிறப்புமிக்க 73&74வது (73 - Rural Local governance, 74 - Urban local governance )  அரசியல்சாசன சட்ட திருத்தம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் (1992ல்) கொடுக்கப்பட்டது.

 

"மக்கள் அருகே அரசாங்கம்" என்ற உயரிய கொள்கையை நடைமுறைபடுத்துவதற்காக, மக்களே தங்கள் பகுதிகளை நிர்வகித்துக்கொள்ள கிராம சபை, வார்டு சபை ஏற்படுத்தப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் மேலாகியும் தமிழகத்தில் வார்டு சபை (நகரங்களில்) அமைக்கப்படவில்லை. பெரும்பாலாலான கிராமங்களில், கிராம சபை பெயரளவிற்கு தான் நடக்கிறது அல்லது நடக்காமல் இருக்கிறது.

 

கட்டாய கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்தவேண்டும்:

வருடத்திற்கு 4 முறை கட்டாயமாக கிராம சபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராம சபைகள் நடைபெறவேண்டும். கடைக்கோடி மக்களையும் அதிகாரப்படுத்துதல் கிராம சபையின் முக்கியமான சிறப்பு. ஆனால் பெரும்பான்மையான கிராம சபைகள் பெயரளவிற்கே நடைபெறுகிறது. தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராம சபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum - போதுமான அளவு மக்கள் பங்கேற்பு) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்து கொள்ள விட்டாலும்  பொய் கையெழுத்து போட்டு கிராம சபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட புகார்கள் பல கிராம சபைகளில் இருந்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு வருகிறது. இது தவிர பல ஊழல் புகார்களையும் தொடர்ந்து கேட்க முடிகிறது.

 

இது போன்ற புகார்களுக்கு இடம் கொடுக்காமல் naalai நடைபெற இருக்கும் கிராம சபையை சிறப்பாக நடத்த உள்ளாட்சித்துறை தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும்.

 

 

பஞ்சாயத்து வரவு-செலவு கணக்குக மறைக்கப்படுவது ஏன்?

பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக வெளியிடவேண்டும் என்பதற்காக மத்திய அரசு PRIAsoft (https://accountingonline.gov.in/) இணையதளத்தில் கொண்டுவந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் பல பஞ்சாயத்துக்களின் வரவு-செலவு கணக்குகள் இதில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

 

 

மங்கிப்போகிறதா  மாநில சுயாட்சி குரல் ?

பேரறிஞர் அண்ணா வழங்கிய உன்னதமான "மாநில சுயாட்சி" கொள்கையை பின்னால் வந்த aatchiyalargal அரசியல் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஜனநாயக பரவலாக்கத்திற்கு ஆக்கபூர்வமாக குறிப்பிடத்தக்க செயல்களை செய்யாமல், தேவைக்கேற்ப மாநில சுயாட்சி கொள்கையை மறந்துவிடுகின்றனர். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துகிடப்பதால் மாநில சுயாட்சி கேட்ட தலைவர்கள், மாநில அரசிடம் இருக்கும் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்க மறுக்கின்றனர். உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்காத ஜனநாயக பரவலாக்கம் அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது என்பதை நம் தலைவர்கள் உணரவேண்டும்.

 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் மத்திய அரசு தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  தர வேண்டிய நிதியை மறுத்துள்ள நிலையிலும், தங்கள் சுய அரசியல் லாபத்திற்காக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாபெரும் வரலாற்று பிழையை ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஊராட்சிகள் தவிக்கும் நிலையில், கிராம சபையின் அவசியம் மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தி "மக்கள் அருகே அரசாங்கம்" மற்றும் காந்தி கண்ட கனவான "கிராம சுயராஜ்யத்தியை" நிறைவேற்ற சட்ட பஞ்சாயத்து இயக்கம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது.

 

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகள்

 

1) உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுவதற்காக தேவையான நிதி மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

 

2) அண்டை மாநிலமான கேரளா கர்நாடகாவில் உள்ளது போல், தெலுங்கானாவில் புதிதாக கொண்டுவந்து இருப்பது போல் (2018)  வலுவான பஞ்சாயத்து சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும்.

 

3) உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி, மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தராமல் இருக்கும் நிதியை பெறவேண்டும்.

 

4) வார்டு சபைகளை (பேரூராட்சி, நகராட்சி & மாநகராட்சி) உடனடியாக தமிழகத்தில் அமைக்கவேண்டும்.

 

5) தமிழகத்தில் முதல்வர் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்  ஏதாவது ஒரு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவேண்டும். அனைத்து கட்சியினரும் "உள்ளாட்சியில் சுயாட்சி" என்ற கொள்கையை ஏற்க வேண்டும்.

 

6) தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து வரவு-செலவு கணக்குகளை PRIAsoft இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

 

7) கட்டாய கிராமசபையை முறையாக நடத்தவேண்டும்

 

8) கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறாத  பட்சத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கிராம சபைகள் மூலம் ஊராட்சிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம சபை பற்றிய விழிப்புணர்வு, பயிற்சி பட்டறைகளை மற்றும் தேவையான ஆவணங்களை வழங்கி மக்களை கிராம சபைகளில் பங்கேற்க ஊக்குவித்து  வருகிறது. இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் பங்கேற்று வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுவருவது.மாநில சுயாட்சிக்கு முதல் குரல் எழுப்பிய தமிழகம், கிராம சுயாட்சிக்காகவும் தன் குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும்.

ஆளுங்கட்சி செய்யுமா? எதிர்க்கட்சிகள் கேக்குமா?? எதிர்க்கட்சிகள் கேட்கும் வரை, ஆளுங்கட்சி செய்யும் வரை மக்களின் குரலாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் பயணத்தை தொடரும்.

 

செந்தில் ஆறுமுகம்

பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545 80270 / 88704 72179


No comments:

Post a Comment