Monday 27 July 2015

மதுவிலக்கு எனும் அரசியல் ஆயுதம்!.. தி இந்து தலையங்கம், 27-7-2015

மதுவிலக்கு எனும் அரசியல் ஆயுதம்!

மது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு, ‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்ற ஒரு திருக்குறள் போதும். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வழிகாட்டுநெறிகள்கூட பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை அரசின் கடமையாகக் குறிப்பிடுகின்றன.
ஒருகாலத்தில் மது ஒழிப்பில் நாட்டிலேயே முன்னோடியாக இருந்த மாநிலம் தமிழகம். இன்றைக்கு அரசே மது விற்கும் மாநிலம். குடிநோயால் கொடூரத் தாக்குதலுக்குத் தமிழகம் ஆளாகிவரும் சூழலில், பிரதான அரசியல் கட்சிகள் மது விலக்கைக் கையில் எடுத்திருப்பது ஆரோக்கியமான மாற்றம். இந்த மாற்றத்தின் பின்னணி எதிர்காலத் தலைமுறை மீதான அக்கறை என்பதைக் காட்டிலும், தேர்தல் ஓட்டுக் கணக்குகள் என்பவை சங்கடப் பட வைக்கின்றன என்றாலும் வரவேற்க வேண்டிய மாற்றம் இது.
தமிழகத்தில் சில கட்சிகள் தொடர்ந்து மதுப் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துவந்தாலும், பிரதான கட்சிகள் மவுனத்திலேயே ஆழ்ந்திருந்தன. ஆனால், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் காட்சிகள் இப்போது மாறுகின்றன. “சுற்றி எரியும் நெருப்பு வளையத்துக்குள்ளே பற்றக்கூடிய கற்பூரமாக தமிழகம் இருக்கிறது” என்று மதுவிலக்கைத் தளர்த்த முதலில் நடவடிக்கை எடுத்தவர் எவரோ, அதே திமுக தலைவர் கருணாநிதி, “திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும்” என்று இன்று அறிவித்திருக்கிறார்.
“இது வெற்று அறிவிப்பல்ல, நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்” என்று அறிவிப்பை உறுதிமொழியாக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி இருவரும் தொடர்ந்து மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மதுவிலக்கு ஓர் அரசியல் ஆயுதமாக உருவெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நிச்சயம் ஆளும் அதிமுகவுக்கு இது ஒரு அரசியல் சவால். 1991 தேர்தலில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரத்துக்கும், முதல் முறை ஜெயலலிதா முதல்வராக ஆட்சியில் அமர்ந்தபோது, கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வரவேற்பு அதிமுகவினருக்கு நினைவிருக்கும். ஆகையால், அதிமுகவும் மதுவிலக்கு ஆயுதத்தை விட்டுவைக்காது. அதிலும் தேர்தலுக்கு முன்பே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்க் கட்சிகளின் வியூகங்களை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
எப்படியோ, இந்த மகத்தான முடிவை எடுக்கப்போகும் ஆட்சியாளர் முன் நிற்கும் வாய்ப்புள்ள ஒரே பெரும் சவால், மது வியாபாரம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம். தமிழக அரசின் வருவாயில் சராசரியாக 25% (2013-14-ல் ரூ.21,641.14 கோடி) மதுபான விற்பனை மூலம்தான் கிடைக்கிறது. இனி, மதுவிலக்கினால் ஏற்படும் இழப்பை எப்படிச் சமாளிப்பது? அரசு இதுபற்றி அலட்டிக்கொள்ளக் கூடாது.
ஆண்டுக்கு 45 கோடி லிட்டர் மது ஆறாக ஓடும் ஒரு மாநிலத்தில், அது ஏற்படுத்தும் பின்விளைவுகளும் சேதங்களும் இழப்புகளும் இப்படி வருவாய்க் கணக்குபோல யாராலும் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், 28,000+ பணியாளர்களைக் கொண்ட ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலம் வேறு என்னென்ன புதிய காரியங்களை மேற்கொள்ளலாம் எனும் வியூகங்களையும் இன்னும் நாம் யோசிக்கவில்லை. ஆகையால், வருமான இழப்புபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. துணிந்தவர்களுக்கு சமுத்திரமும் கால் மட்டம்தானே!

No comments:

Post a Comment