Thursday 16 July 2015

மதுவிலக்கு எனும் கண்மூடித்தனமான சித்தாந்தம்!... Article in Vikatan AGAINST LIQUOR Prohibition

மதுவிலக்கு எனும் கண்மூடித்தனமான சித்தாந்தம்!
                                                                  வாசகர் பக்க கட்டுரை
து விலக்கு வந்தே தீர வேண்டும் என்ற கருத்து வலிவு பெறத் துவங்கியிருக்கிறது. கேரளாவில் மதுவிலக்குக்கான முனைப்புகள் துவங்கியிருக்கும் வேளையில், ஒரு முக்கியமான கேள்வி நமக்குள் எழுகிறது. மது விலக்கு சாத்தியம்தானா?.

அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘டைம்’ வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. ‘சென்ற நூற்றாண்டின் 100 சிறந்த  மனிதர்கள்’, ‘100 சிறந்த பாடல்கள்’, ‘100 சிறந்த நாவல்கள்’ என்றெல்லாம் பட்டியல்களை வெளியிட்டது. அதில் ‘சென்ற நூற்றாண்டின் 100 மோசமான சித்தாந்தங்கள்’ என்பதும் அடக்கம். அதில் முதலிடம் பெற்று முன்னணி வகித்தது ‘மதுவிலக்கு’தான்.

அந்தக் கட்டுரையில் ‘சென்ற நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கை அமல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில இஸ்லாமிய நாடுகளைத் தவிர எல்லா இடத்திலும் மதுவிலக்கு தோல்வியைத் தழுவியது. இஸ்லாமிய நாடுகளில் அது முடிந்ததற்கு காரணம் சமய ரீதியாக இஸ்லாம் மதுவுக்கு எதிராக இருக்கிறது என்பதும், அந்த நாடுகள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நடந்தன என்பதும்,  குடிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் நிறைய நேரம் மரண தண்டனையை சந்திக்க நேரிடும் என்பதும் முக்கிய காரணங்களாக இருந்தன.  ஆனால் இந்த மாதிரி எல்லாம் செய்ய இயலாத ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு தோல்வியே கண்டிருக்கிறது“ எனக் குறிப்பிடப்பட்டது.

அமெரிக்காவிலேயே கூட 1920ல் துவங்கி 1933 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது கள்ளச் சாராயம் ஆறு போல் ஓடியிருக்கிறது. பெரிய பெரிய ஃப்ளாஸ்க்-களில் ரம் நிரப்பிக் கொண்டு கார் டிக்கி-யின் அடியில் ஒளித்து வைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்கள். மதுவிலக்கு அமெரிக்காவில் மாபெரும் தோல்வியடைந்தது. மொத்தமாக குடித்த சாராயத்தின் அளவு குறைந்திருந்தாலும், அதற்கு மக்கள் கொடுத்த விலை அதிகம். மதுவிலக்கு அமலில் இல்லாதபோது ஒரு தனி மனிதன் மதுவுக்கு 17 டாலர்கள் செலவழித்திருக்கிறான். அதே ஆள் மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் மதுவுக்கு செய்த செலவு 35 டாலர்கள். இது பணவீக்கத்தை கணக்கில் எடுக்காமல் வந்த புள்ளிவிபரம்.
ஒரு தனி மனிதன் கொடுத்ததை விட சமுதாயம் கொடுத்த விலை இன்னும் அதிகம். கருப்பு பொருளாதாரம் நாடு முழுதும் தழைத்தோங்கியது, தாதாக்கள் அவர்கள் கும்பல்களோடு எங்கெங்கும் உலவினார்கள். கள்ளச் சாராயக் கடைகள் மழைக் காளான்கள் போல முளைத்தன. அவற்றால் குற்றங்கள் பெருகின. பொதுவான அடிதடிக் குற்றங்கள் 12 சதவீதம் உயர்ந்தன. கொலை 12 சதவீதம், போதைப் பழக்கம் 44 சதம் என்று உயர்ந்தது. மதுவிலக்கால் காவல் துறைக்கு ஆன கூடுதல் செலவு 11%. 

திருட்டுத் தனமாக விற்கப்பட்ட போலி சாராயம் விலை அதிகமானதால் சமுதாயம் செய்த கூடுதல் செலவு வருடத்துக்கு 3 பில்லியன் டாலர்கள். இந்த அளவுக்கான பணம் கருப்பு சந்தைக்கு கிடைத்ததால், கருப்பு பொருளாதாரம் நிறைய நேரம் வெள்ளைப் பொருளாதாரத்தை விட மேலோங்கி காணப்பட்டது. இத்தனைக்கான வரிப்பணம் அரசாங்கத்துக்கு கிடைக்காததால் கட்டுமான திட்டங்கள் தடைப்பட்டன. 

மதுவிலக்கு நீக்கப்பட்டபோது அதனை முதலில் ஆதரித்த அதிபர் ராக்ஃபெல்லர் ஜூனியர், ‘மதுவிலக்கு கொண்டு வந்தால் அதற்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்று நினைத்தேன். கூடிய விரைவில் மது எனும் அரக்கனின் பிடியில் இருந்து சமுதாயம் விடுபட்டு விடும் என்று நம்பினேன். இப்போது பெரும் தயக்கத்துடன் இந்த நோக்கம் தோல்வியடைந்து விட்டது என்று ஒப்புக்கொள்கிறேன்.
நான் நினைத்ததற்கு மாறாக குடிப்பது அதிகரித்து விட்டது, திருட்டு பார்கள் அதிகரித்து விட்டன. குற்றம் செய்ய சிறு கும்பல்கள் இருந்தது போய் ஒரு ராணுவம் அளவுக்கு குற்றவாளிகள், போக்கிரிகள்  அதிகரித்து விட்டார்கள். சட்டத்துக்கு இருந்த மதிப்பே காணாமல் போய் விட்டது. இதற்கு முன்னே எப்போதும் இருந்திராத வகையில் குற்றங்கள் அதிகரித்து விட்டன"  என்று கூறியிருந்தார். 

ஆந்திராவில் மதுவிலக்கின்போது குடிமகன்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. விருப்பமான ப்ராண்ட் கிடைக்காது அவ்வளவுதான். நிறைய கள்ளச் சாராய சாவுகள், உபாதைகள் நிகழ்ந்து கொண்டு வேறு இருந்தன. எனக்குத் தெரிந்த ஒருவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவர் வீட்டின் அலமாரியில் முழுக்க முழுக்க பாட்டில்களை நிரப்பி வைத்திருந்தார். பியரோ, ரம்மோ, விஸ்கியோ எப்போதுமே அவர் வீட்டில் தட்டுப்பாடு வந்து நான் பார்த்ததில்லை. பணம் படைத்தவன் அலமாரி முழுக்க நிரப்பிக் கொள்ள,  ஏழை கள்ளச் சாராயம் குடித்து கண்களை இழந்து கொண்டு இருந்தான். 

இந்தியா மாதிரி பிராந்திய அமைப்பு கொண்ட நாடுகளில் தேசம் முழுக்க மதுவிலக்கு கொண்டு வரவே முடியாது. அப்போது ஒரு மாநிலம் இல்லாவிட்டால் பக்கத்து மாநிலத்தில் இருந்து மது கடத்துவது எளிதாகிவிடுகிறது. நம்மால் ‘செக் போஸ்டில் இருக்கும் போலீஸ்காரர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் எல்லாரும் நேர்மைக்கு பெயர் போனவர்கள்,’ என்று யாராவது சொல்ல முடியுமா? ஆகவே மதுவிலக்கு என்றால் அரசாங்கத்துக்கு வர வேண்டிய பணம் தாதா/ரவுடி கும்பல்களுக்கு போகப் போகிறது என்றுதான் அர்த்தம். மற்றபடி குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழிக்கும் பணம் கூடப் போகிறது. குடிக்காக அவர்கள் கொடுக்கும் உடல்-உபாதை ரீதியான விலையும் கூடப் போகிறது. குடித்து குடித்து ஒரு ஐந்து ஆண்டுகளில் கெட வேண்டிய குடல் அடுத்த நாள் காலையிலேயே கிழியப் போகிறது. கூடவே கண்கள் போகப் போகிறது. அதுதான் மதுவிலக்கால் நாம் காண இருக்கும் பலன். 

மதுவை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஒரு முக்கிய வாதம் ‘மது இந்தியக் கலாச்சாரத்திலேயே இல்லை,’ என்பது. மது என்பது இந்தியா மட்டுமல்ல மனித நாகரீகத்துக்கே அடிப்படை. உலகிலேயே மெசபடோமியா பகுதியில்தான் (இன்றைய ஈராக், ஈரான் பகுதி) மனிதன் முதன் முதலில் விவசாயம் பண்ண ஆரம்பித்தான். முதன் முதலில் பயிரிடப்பட்ட தானியம் பார்லி. ஆவணப் படம் ஒன்றில் பார்லி விவசாயம் பண்ண வேண்டிய தேவை இருந்ததே அந்தக் கால மனிதர்கள் பியரை தயாரிக்க செய்த வேலைதான் என்று கூறுகிறார்கள். அதாவது ‘பியர் கண்டிப்பாக தேவை’ என்று மட்டும் ஆதி மனிதன் நினைக்காமல் இருந்திருந்தால் விவசாயம் என்ற ஒன்று வந்திருக்கும் சாத்தியக் கூறுகள் கம்மி என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
இப்போது இந்திய வரலாற்றைப் பார்ப்போம். மைக்கேல் உட் என்னும் ஆங்கில  வரலாற்றறிஞர்,  Story of India-வில், சோமபானம் என்னும் வேதகால பானத்தை தேடி அலைந்து கடைசியில், பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் அந்தச் செடியை கண்டுபிடித்திருக்கிறார். அதில் இருந்து சோமபானம் வேறு தயாரித்து குடித்து ‘கிக்’ எப்படி இருக்கிறது என்றும் பரிசோதனை பண்ணி விளக்கியிருக்கிறார். வெண்டி டொனிகர் என்னும் சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் On Hinduism எனும்  புத்தகத்தில் எப்படி வித விதமான போதை உட்கொண்டு வேதகால மக்கள் உலகின் துவக்கம், கடவுளர்களின் தோற்றம் பற்றிய மாயத் தோற்றங்களை  (hallucinations) கண்டார்கள் என்று ஆராய்கிறார். 

இதே தமிழ் வரலாற்றை எடுத்துக் கொண்டால், மீனா கந்தசாமி ஒரு கட்டுரையில், "தமிழர்கள் அத்தி மரத்தின் வேரை வைத்து கள் உருவாக்கி இருக்கிறார்கள். உசில மரத்தின் கிளைகளில் இருந்து கள் எடுத்திருக்கிறார்கள். மேலும் இலுப்பைப் பூ, பனை மரம், அரச மரம், தென்னை மரம், ஏன் நெல்லில் இருந்து கூட கள் எடுத்ததற்கு இலக்கிய ஆவணங்கள் இருக்கின்றன. தமிழர்களாகிய நாம் மிகவும் பதப்படுத்தப்பட்ட கள்ளைத்தான் விரும்பி அருந்தியிருக்கிறோம். குடிக்கும் போது முகம் கோண வேண்டிய அளவு புளிக்க வேண்டும். கரும்பில் இருந்து செய்யப்படும் சாராயம் ‘மட்டு’ என வழங்கப்பட்டது, அது பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று நம்பப் பட்டது. ‘உண்டட்டு’ எனும் இன்னொரு சாராயம் குடித்தால் கண்டிப்பாக ஆட்டம் ஆட வேண்டும் என்பது சம்பிரதாயம். மது விற்கும் பெண் ‘படுவி’ என்று வழங்கப் பட்டார்" என்று எழுதுகிறார்.

இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது. மதுவுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் உறவு தமிழ் மொழி அளவுக்கு பழையது. இந்தியாவுக்கும் மதுவுக்கும் உள்ள உறவு வேதகாலத்துப் பழையது. அப்படியானால் மக்கள் குடித்து சாக வேண்டியதுதானா, மதுவுக்கு  அடிமையானவர்களுக்கு வேறு வழியே இல்லையா, என்றால், பதில் இருக்கிறது. குடிப்பவர்களில் இரண்டு வகை: சும்மா எப்போதாவது குடிப்பவர்கள். காலை எழுந்தவுடன் அன்றைய மதுத் தேவை பற்றி யோசிப்பவர்கள். இந்த இரண்டாமவர்கள்தான் போதைக்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு counselling, therapy, மற்றும் தேவைப்பட்டால் மருந்து மாத்திரைகள், என்றெல்லாம் தேவைப்படும். நல்ல சத்தான உணவு தேவைப்படும். இவற்றை எல்லாம் அரசாங்கம் இந்த மையங்களில் இலவசமாக அளிக்க வேண்டும். 

அரசாங்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எல்லாம் போதை விடுதலை மையங்கள் (deaddiction centres) அமைக்க வேண்டும். இந்த விழிப்பு மையங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் ஒரு டேபிள் சேர் வைத்துக் கொண்டு ஒரு போதை விழிப்பு ஆலோசகர் உட்கார்ந்து கொள்வது கூட நல்லது. அவருக்கான சம்பளத்தை அந்த டாஸ்மாக் லாபத்தில் இருந்தே அளிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. 

இப்போதைக்கு Deaddiction, Rehabilitation போன்ற விஷயங்கள் எல்லாம் நம் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, அறவே தெரிவதில்லை. உண்மையாகவே குடியை விட்டொழிக்க நினைப்பவர்களால் கூட அதை எப்படி செய்வதென்று தெரிவதில்லை. ஒரு நாள், ரெண்டு நாள் முயன்று திரும்பி அதில் விழுந்து போகிறார்கள். இதனால் அவர்களின் சுயமரியாதை வேறு பாதிப்புக்குள்ளாகி தங்களைத் தாங்களே கேவலமாக நினைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு வேறு போகிறார்கள்.
 இது தவிர நிறையப் பேர் குடித்து விட்டு சண்டை போடுவதற்கோ, வீட்டில் பொண்டாட்டி, பிள்ளைகளை அடிப்பதற்கோ உளவியல் ரீதியிலான நிறைய பிரச்னைகள் காரணமாக இருக்கின்றன. Stress Disorders, Post-Traumatic Disorders, மற்றும் Clinical Depression போன்ற மன உபாதைகளால் பாதிக்கப் பட்டவர்கள் குடியில் அடைக்கலம் நாடுகிறார்கள். இந்த மாதிரி மன-நலப் பாதிப்புகள் இருப்பதே நம்மில் நிறைய பேருக்கு, குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு தெரியாது. அந்தப் பிரச்னைகளை கண்டறிந்து தெரபி, கவுன்சிலிங் போன்றவை வழங்கினாலே அவர்கள் இதில் இருந்து விடுபடலாம்.

வயிற்று வலியால் துடிக்கிற ஒருவன், அதற்கு தீர்வாக வலி மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறான். அது அவனுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. ஆனால் அந்த வலி மாத்திரை அவன் கிட்னியை தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கிறது. அவன் வலிக்கான  காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும். அதை விட்டு ‘அந்த மாத்திரை உன் கிட்னிக்கு பாதிப்பு,‘ என்று அவனிடம் இருந்து அதை பிடுங்கி விட்டால் என்ன ஆகும்? எப்படியாவது அந்த மாத்திரையை அடைவதற்கு அவன் முயல்வான். கூடவே வலியால் துடித்துப் போவான்.

தமிழ் நாட்டில் மதுவிலக்கு என்பது, வயிற்று வலியை தீர்க்காமல் வலி மாத்திரையை பிடுங்குவது போலதான். அது கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல சாராயத்துக்கு செலவிட்டதில் இருமடங்கை கள்ள சாராயத்துக்கு செலவிட வேண்டிய அவலம் ஏற்படும். நிறைய கண்கள் பார்வை இழக்கும். நிறைய தாதா கும்பல்கள் புதிதாகப் பிறக்கும். நிறைய பணக்கார வீடுகளின் அலமாரிகள் பாட்டில்களால் நிறைந்து வழியும்.
இதுதான் மதுவிலக்கு எனும் சித்தாந்தம் ஏற்படுத்தப் போகும் விளைவு. அதற்கு தமிழ்நாடு தயாரா?
- ஸ்ரீதர் சுப்ரமணியம், (சென்னை)

No comments:

Post a Comment