Tuesday 21 July 2015

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு...வரவேற்பும்...வேண்டுகோள்களும்

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு
        வரவேற்பும்… வேண்டுகோள்களும்
       சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பத்திரிகை செய்தி ( 21/7/2015 )
                          8754580274, 8754580270

”சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் உளப்பூர்வமாக வரவேற்கிறது. சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தி.மு.க. வைத்துள்ள முதற்புள்ளி இது.  அடுத்த தலைமுறையைக் காப்பாற்றும் இந்த அறிவிப்பை தி.மு.க வெளியிட்டிருப்பது அரசியல்ரீதியாக அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இனி மதுவிலக்கு நிலைப்பாடு குறித்துப் பேசாமல், எந்த அரசியல் கட்சியும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கமுடியாது என்ற நிலையை தி.மு.க.வின் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கையோடும், அறிவிப்போடும் நின்றுவிடாமல் இறுதிவரை உறுதியாக நின்று மதுவிலக்கை தி.மு.க. அமல்படுத்தவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது, சில வேண்டுகோள்களோடு…

      
மதுவிலக்கிற்காக சிறை செல்லத் தயார் … அண்ணா 
1.   தேர்தல் வரை காத்திருக்காமல் களப் போராட்டங்கள் மூலம் உடனடியாக மதுவிலக்கை நோக்கிய முயற்சிகளை எடுத்து ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தரவேண்டும். இந்த சமயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் 12.4.1968 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டில் பேசியதை நினைவு கூறுகிறோம்.

மாநாட்டில் பேசிய அண்ணா:
       “….மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்கு அந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அறைகூவல் விடுத்தார்.

மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களுக்குச் சென்று, அங்கு மதுவிலக்குகோரி போராடி சிறைசெல்லத்தயார் என்றார் அண்ணா. அண்ணாவால் துவங்கப்பட்ட தி.மு.கவினரும் அவரின் வழிநடந்து தமிழகந்தழுவிய “டாஸ்மாக் மறியல்” நடத்தி “சிறை நிரப்பும் போராட்டத்தில்” இறங்கவேண்டும். தி.மு.க.தலைமையின் அறிவிப்பை, தங்கள் போராட்டங்களுக்குப் பச்சைக்கொடி எனக்கருதி தி.மு.க. இளைஞரணியினர், மானவரணியினர், மகளிரணியினர் மதுவிலக்குப் போராட்டத்தை துவக்கவேண்டும். குறிப்பாக, டாஸ்மாக் நிர்வாகம் 55 விதிமுறைகள் வகுத்திருந்தும், அவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பார்களை மூட முதலில் களமிறங்கவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு
30.08.1971 ல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.( 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது) தி.மு.க. தீவிரப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்த ஆண்டு, 30.08.2015 க்குள் தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிப்பே வெளியாகும் வாய்ப்புள்ளது. களமிறங்குமா, தி.மு.க..? இல்லை அறிக்கையோடு நிறுத்திவிட்டு சட்டமன்றத் தேர்தல் வரும்போதுதான் மதுவிலக்கு குறித்துப்பேசுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தி.மு.க. மட்டுமல்லாமல், மதுவிலக்கை ஆதரிக்கும் பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்ட், வி.சி.க, நாம் தமிழர், த.மா.க., புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மதுவிலக்கு கோரி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தால், முடிந்தால் ஒருங்கிணைந்து போராடினால் விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வரும். ஓட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் நாங்கள் போராடுவோம் என்று அரசியல் கட்சிகள் களமிறங்கவேண்டிய தருணமிது.

2.   தி.மு.க.வினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படுமா.. ?

தி.மு.க.வின் முன்னாள் மந்திரிகள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு போன்றவர்களாலும் கட்சிக்கு நெருக்கமானவர்களாலும் நடத்தப்படும் எலைட் டிஸ்லரி, கோல்டன் வாட்ஸ் டிஸ்டிலரி , எஸ்.என்.ஜே. டிஸ்லரி, , கால்ஸ் டிஸ்லரி போன்ற மதுபான உற்பத்தி ஆலைகளை மக்கள் நலன் கருதியும், கட்சியின் நிலைப்பாடு கருதியும் விரைவில் மூடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்த வேண்டும். சமுதாய மாற்றத்திற்காக மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சியானது தனது கட்சியினர் மதுபான ஆலைகள் நடத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் எங்கள் இயக்கம் பெற்றுள்ள புள்ளிவிவரத்தின் படி
2013-2014ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.11876 கோடிக்கு மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், மேற்குறிப்பிட்ட மதுபான ஆலைகளிலிருந்து மட்டும் ரூ.3684 கோடிக்கு கொள்முதல் நடந்துள்ளது என்பதை தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு(31%). ( எலைட்-ரூ.659 கோடி, எஸ்.என்.ஜே. ரூ.1125 கோடி, கால்ஸ்: ரூ.1317 கோடி, கோல்டன் வாட்ஸ்: ரூ.583 கோடி )

3.   அ.தி.மு.க.வின் மதுவிலக்கு நிலைப்பாடு என்ன… ?
அ.தி.மு.கவைத் தவிர மிகப்பெரும்பாலான கட்சிகள் மதுவிலக்கிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அரசியல் கணக்குகளை தள்ளிவைத்துவிட்டு சமூக நலன் கருதி-குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி ஆளுங்கட்சியே மதுவிலக்கு அறிவிப்பை வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். முதற்கட்டமாக, “பார்களை மூடுவது”, கடைகளின் எண்ணிக்கை, மதுவிற்பனை நேரம், நாட்களைக் குறைப்பது, மறுவாழ்வு மையங்கள் திறப்பது போன்ற நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ”
தற்போது தமிழக அரசின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி 
(31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. சொந்தவரிவருவாயில், முக்கிய அம்சமான வணிகவரி மூலம் ரூ.72068 கோடியிலும் ரூ.22375 கோடி ( இதுவும் 31%) டாஸ்மாக் மூலம் வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வது எப்படி என்று ஆராய பொருளாதார நிபுணர்கள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், தொழிற்துறையினர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை பெறவேண்டும். குஜராத்தில் மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்போது தமிழகத்தில் ஏன் அது முடியாது..?
வருமான இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்தது போல், கள்ளச்சாராயப் பிரச்னைகளை முறையாகக் கையாள்வதற்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து ஆய்வறிக்கை பெற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் 843 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கை நாங்கள் அமல்படுத்தினால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்ப்பை ஈடுசெய்ய மத்திய அரசு தற்காலிக நிதியாவது தரவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கவேண்டும்.
மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த நாங்கள் தயார் என்ற நிலைப்பாட்டிற்கு ஆளுங்கட்சி வந்தால்தான் இதுவெல்லாம் சாத்தியமாகும். அந்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம், சமுதாயத்தின் அவசியம் என்பதை ஆளுங்கட்சி உணரவேண்டும். இல்லையெனில், தேர்தல் சமயத்தில் மக்கள் உணர்த்துவார்கள்.
மதுவிலக்கு நோக்கி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பணிகள்:

16.03.2014 அன்று  “2016 மதுவிலக்கு ஆண்டு” என்ற பிரச்சாரத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் நோக்கம் மதுவிலக்கு என்ற கோஷத்தை தமிழக சட்டமன்ற தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாக கொண்டுவர வேண்டும் என்பதே. அந்த சமயத்தில் மதுவிலக்கு என்பது ஒரு பெரிய விவாத பொருளாக இருக்கவில்லை.

32
நாட்கள் மதுவிலக்கு வேண்டி காந்தியவாதி சசி பெருமாள் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதும் எந்த அரசியல் கட்சிகளும் இதில் பெரிய போராட்ட நிலையை எடுக்கவில்லை. மதுவிலக்கு என்பதை விவாத பொருளாக மாற்ற இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும் மற்றும் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி வைத்துள்ள திமுக அல்லது அதிமுக மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுக்க வேண்டும். 


இதை
மனதில் கொண்டு களம் இறங்கிய சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதலில் அனைத்து மது ஒழிப்பு ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியது. அவர்கள் செய்யும் போராட்டங்களுக்கு இயக்கத்தின் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மற்ற இயக்கங்கள் இணைந்து நடத்தும் போராட்டங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மது விலக்கு மிஸ்டு கால் எண் மூலம் இதில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ( இதுவரை 17952 மிஸ்டுகால்கள் வந்துள்ளன )

மதுவிலக்கை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் தயார் செய்யும் பணியும் நடந்து வந்தது. பல்வேறு மது ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் மற்றும் ஸ்டிக்கர்கள் இயக்கத்தின் சார்பாக வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு நண்பர்கள் தங்கள் கடின உழைப்பும் நன்கொடைகளையும் கொடுத்துள்ளார்கள்.

மேலும் எங்கெல்லாம் மக்கள் மதுக்கடைகளுக்கு எதிராக திரளுகிறார்களோ அங்கெல்லாம் இயக்க நிர்வாகிகள் உடனடியாக சென்று போராட்டங்களில் கலந்து கொண்டும் அவர்களுக்கு தக்க சட்ட ஆலோசனை கூறியும் உதவி செய்தார்கள். பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

மதுவிலக்கு குறித்து மக்கள் கருத்தை அறிந்துகொள்ள பல மாவட்டங்களில் “மக்கள் வாக்கெடுப்பு” (Public Referendum) நடத்தப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுகேட்டு வீட்டுக்கு வரும் வேட்பாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் மதுக்கடைகளை மூடுவதற்கு  உத்தரவாதம் கொடுக்கும் வகையில் கையெழுத்து பெற ”உறுதிமொழி” சீட்டு வினியோகம் செய்யப்பட்டது.

 
டாஸ்மாக்கில் விற்கப்படும் சாராயத்தில் ஆல்கஹால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும், குப்பைகள் மிதப்பதாகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சோதனை அறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பல பத்திரிகைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. டாஸ்மாக் நிர்வாகம் மறு சோதனை செய்து முடிவுகளை நமக்கு அனுப்பும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.

இதனிடையே துரதிர்ஷ்டவசமான சில நிகழ்வுகளால் (சிறுவர்களுக்கு சாராயம் கொடுக்கும் வீடியோ) டாஸ்மாக் மீது மக்களின் கோபம் மிகவும் அதிகமானது. கடை முற்றுகை மற்றும் கடை உடைப்பு போராட்டங்கள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

இவை
அனைத்தும் சேர்ந்து தான் நேற்று திமுக தலைவரை மதுவிலக்கு நோக்கிய திசையில் அறிக்கை அளிக்க உதவியுள்ளது. தற்பொழுது அதிமுக, தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இனி மதுவிலக்கு பற்றி பேசாமல் 2016 தேர்தலை எந்த கட்சியும் சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒரு சிறிய கருவியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். மேலும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.. சாராயம் இல்லாத தமிழகம் உருவாக்குவோம். நமது இளைய தலைமுறையை இந்த போதை நோயில் இருந்து காப்பாற்றுவோம்.

No comments:

Post a Comment