Wednesday 15 July 2015

டாஸ்மாக் சரக்கில் நச்சுத்தன்மை ?

டாஸ்மாக் சரக்கில் நச்சுத்தன்மை ?நடுங்கவைக்கும் லேப் ரிசல்ட் ! - நன்றி: ஜீனியர் விகடன்(18.07.2015)
மதுபானங்களால் கல்லீரல் பாதிக்கப்​பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியாகி​யிருக்கும் தகவல் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். லஞ்சம், ஊழல் மற்றும் குற்ற எதிர்ப்பு இயக்கத்தின் நிறுவனர் தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்ந்ததற்கான பின்னணியையும் காரணத்தையும் நம்மிடம் விளக்கினார் தேவராஜன்.
‘‘மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மையே, டாஸ்மாக் மது அருந்துவோரின் மரணங்களுக்குக் காரணம். இதுதொடர்பாக 2010-ம் ஆண்டு, டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்  சில தகவல்களைப் பெற்றேன். அதில், ‘பீர், விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபானங்கள், தமிழக அரசுக்குச் சொந்தமான தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்து, இந்த மதுபானங்கள் குடிப்பதற்குத் தகுதியானவை என்று சான்றிதழ் பெற்ற பின்னரே விற்பனை செய்யப்படுகிறது’ என்று சொல்லப்பட்டு இருந்தது. 
இதைத் தொடர்ந்து, ‘மதுபானங்களின் தரம், நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ததற்கான ஆதாரங்களும் அதற்கான எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை’ என்று தடய அறிவியல் துறை இயக்குநர் பதில் தந்தார். தரமணியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய ஆய்வுக்கூடத்தின் இயக்குநரிடம் கேட்டதற்கு, ‘மதுபானங்களின் உள்ள நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய தங்களிடம் எந்த ஒரு வசதியும் இல்லை’ என்று சொன்னார்.
மதுபானங்கள் எப்படி தயாரிக்கப் படுகின்றன? என்னென்ன வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன? மதுபானம் குடிப்பதால் என்ன பலன்கள் உள்ளன? பெண்கள் மதுபானம் குடிக்கத் தகுதியானவர்களா? மதுபானம் குடிப்பதற்கு ஏதாவது வரையறை உள்ளதா? மதுபானங்களைக் குடிக்கும் நுகர்வோர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஏதாவது மருத்துவக் காப்பீடு செய்துள்ளதா? மதுபான பாட்டில்களில் காலாவதியாகும் தேதி மற்றும் அதில் உள்ள வேதிப் பொருட்கள் குறித்த விவரங்களுடன் ‘லேபிள்’ ஒட்டப்பட்டுள்ளதா?’ என பல கேள்விகள் கேட்டிருந்தேன். பதிலே இல்லை. எனவே, நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தேன்” என்றார் தேவராஜன்.
அவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி கெளல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘‘தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
 
ஸ்லோ பாய்சன்!
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது, சட்டப் பஞ்சாயத்து இயக்கம். டாஸ்மாக் மதுபானங்களில் என்ன இருக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியது இந்த இயக்கம்.
“கடந்த 17-ம் தேதி, சென்னை தி.நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மிடாஸ் கம்பெனியின் ‘டே நைட்’ பிராந்தியை வாங்கினோம். அந்த மதுபானத்தை கிண்டியில் உள்ள அரசின் உணவுப் பகுப்பாய்வகத்தில் பரிசோதனை செய்யச் சொன்னோம். ஆனால், மதுபானத்தை பரிசோதிக்க முடியாது என்று அங்கு திட்டவட்டமாகக் கூறினர். அதன்பிறகு கிண்டி தொழில்பேட்டையில் செயல்படும் அரசின் அனுமதி பெற்ற மற்றோர் ஆய்வகத்தினர் பரிசோதிக்க சம்மதித்தனர்.
கடந்த 22-ம் தேதி டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தனர். ஆய்வு செய்யப்பட்ட ‘டே நைட்’ பிராந்தி பாட்டிலில் ஆல்கஹாலின் அளவு 42.8 சதவிகிதம் வி.வி (பாட்டிலில் உள்ள ஆல்கஹாலின் அளவைக் குறிக்கும் குறியீடு) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ரிப்போர்ட்டில் 46 சதவிகிதம் வி.வி என்று வந்தது.
அதுபோல படிமங்கள் இருக்கக் கூடாது என்பது சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ரிப்போர்ட்டில் படிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. படிமங்கள் என்று சொல்லும்போது அது நச்சுத்தன்மை தரக்கூடியதாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பாட்டிலில் கலக்கப்பட்டுள்ள நிறம், வாசனை உள்ளிட்ட பொருட்களின் அளவு குறித்த விவரங்கள் இல்லை. அதற்கென்று தனியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் கர்நாடகாவில் உள்ள ஓர் ஆய்வகத்திடம் கொடுக்க இருக்கிறோம். அதன் பிறகு, டாஸ்மாக் மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மை குறித்த விவரங்கள் தெரியவந்துவிடும். ஆல்கஹாலின் அளவு பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமாக இருக்கிறது. இதனால், குடித்தவுடன் கூடுதல் கிக் கிடைக்கும். ஆல்கஹாலின் அளவு கூடுதலாக அதிகரிக்கப்படும்போது, அது மனிதனைக் கொல்லும் ‘ஸ்லோ பாய்சன்’ ஆக மாறுகிறது” என்றார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்.
இதுகுறித்து டாஸ்மாக் தென்சென்னை மாவட்ட மேலாளர் கோவிந்தராஜிடம் கேட்டோம். “ ‘டே நைட்’ பிராந்தியை நாங்களும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். எங்களுடைய ரிப்போர்ட்டில் 42.8 சதவிகிதம் வி.வி என்றே வந்துள்ளது. அதுவரைக்கும் அந்த பிராண்டை விற்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம். இப்போது அது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள மதுபானங்கள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே விற்பனை செய்யப்படுகின்றன” என்றார்.
நல்லாட்சி தர  வேண்டும் என்பதற்காக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடனாக விஷத்தை விற்பனை செய்கிறார்கள்.
 - எஸ்.மகேஷ்

அது சாராயம் அல்ல, விஷம்!
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் தேவசகாயம்:
“தமிழகத்தில் தயாரிக்கப்படும் மதுபான வகைகள் மனிதன் குடிப்பதற்கு தகுதியற்றவை. ஏனெனில், மதுபான தயாரிப்புகளுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன. அவை எதுவும் இங்கு பின்பற்றுவதாகத் தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது ‘ஸ்பிரிட்’ எனப்படும் எரிசாராயம். அதைக் குடித்தால், மனிதனின் மூளை, நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் நேரடியாக பாதிக்கப்படும். எரிசாராயத்தை மனிதன் குடிக்கக்கூடிய மதுபானமாக மாற்ற வேண்டுமானால், அதை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது பூமிக்கு அடியில் புதைத்து வைக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறை இருப்பதாகத் தெரியவில்லை. மதுபானங்களின் தரம், தயாரிப்பு உள்ளிட்டவை கண்காணிக்கப்பட வேண்டும். அவை ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் குறைந்த அளவே ஆல்கஹால் தன்மை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதிக அளவு ஆல்கஹால் தன்மையுடைய மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுவே இளம் விதவைகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் மாறி வருவதற்குக் காரணம். எனவே, இந்த அரசை ‘மக்கள் நல அரசு’ என்று சொல்வதைவிட ‘மக்கள் விரோத அரசு’ என்றே சொல்லலாம்.”

No comments:

Post a Comment