Sunday 18 December 2016

Don't SHIFT but CLOSE Liquor Shops.. Satta Panchayat Press Release - 19-12-2016

To the Editor,

Tamilnadu Government should permanently close the 2000 liquor shops situated nearby National,State Highways(As per supreme court order) Civil society should ensure that these shops are not SHIFTED but CLOSED.. 
Satta Panchayat Iyakkam

8754580274

          

                    உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்படவுள்ள 2000 மதுக்கடைகளை
              இடமாற்றம் செய்யக்கூடாது… நிரந்தரமாக மூடவேண்டும்

-        சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்                      பத்திரிகை செய்தி ( 19-12-2016 )

தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது(15.12.2016) மிகுந்த வரவேற்புக்குரியது. இவ்வுத்தரவால் தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள 2000 மதுக்கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளது. இக்கடைகள் மூடப்படுவதில் பின்பற்றப்படவுள்ள வழிமுறையை ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் உற்று நோக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக மதுக்கடை ஒன்றை மூடுவதற்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் உள்ள மதுக்கடையானது மூடப்பட்டு, அதே கடையானது வேறு இடத்தில் திறக்கப்படும். இதற்கு "இடமாற்றம்"(Shifting) என்று பெயர். அந்த மதுக்கடையானது நிரந்தரமாக மூடப்பட்டால் அதற்கு "மூடுதல்"(Closure) என்று பெயர். சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ள மதுக்கடைகளை எதிர்த்துப் போராடியபோது மக்களின் போராட்டத்தைத் தணிக்க டாஸ்மாக் நிர்வாகம் பெரும்பாலான நேரங்களில் "இடமாற்றத்தையே" செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


டாஸ்மாக் கடைகள் தொடர்பாக
2013ல் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.  2013ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து(2015ல்) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்தான பட்டியலை நாங்கள் வாங்கிப் பார்த்தபோது மொத்த எண்ணிக்கை குறையவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது, மூடப்பட்ட கடைகளில் மிகப்பெரும்பாலான கடைகள்  அருகிலோ வேறு இடத்திலோ திறக்கப்பட்டது தெரியவந்தது.


இப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்படவுள்ள 2000 டாஸ்மாக் கடைகளும் இதேபோன்ற நடைமுறைகளால் வேறுஇடத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஊடகங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மூடப்படும் இக்கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படக்கூடாது என்று குரல்கொடுக்கும் போது அரசிற்கு கூடுதல் அழுத்தம் உருவாகும். அத்தகையதொரு அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவ்வறிக்கையின் நோக்கம்.


தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் மூடப்படவுள்ள
2000 மதுக்கடைகளை "இடமாற்றம்" செய்யாமல் நிரந்தரமாக மூடவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


அதிமுக, தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஆட்சிப்பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. விற்பனை நேரம் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை, மதுவிலக்கை அமல்படுத்தும் தனது கொள்கை முடிவின் அடுத்தகட்டமாக எடுத்துக்கொண்டு மூடப்படவுள்ள
2000 மதுக்கடைகளை வேறு இடத்தில் திறக்கமாட்டோம் என்று தமிழக அரசு / டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கவேண்டும். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு
ஆளுங்கட்சியும், தமிழக அரசும் செலுத்தும் சிறப்பு அஞ்சலியாகக் கூட அமையும்.


இதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி பார்களை மூடுதல், மறுவாழ்வு மையங்களைத் துவங்குதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேரளா அரசானது ஆண்டுக்கு 10
% மதுக்கடைகளை மூடி 10 ஆண்டுகளுக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம் என்று தெளிவான காலவரையறை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், தமிழக அரசும் மதுவிலக்கை நோக்கிய தனது திட்டம் என்பதை காலவரையறையோடு அறிவிக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


                                                                                         அண்ணாத்துரை,
                                                                    மாநில மதுஒழிப்பு அணி ஒருங்கிணைப்பாளர்
                                                                                      
87545-88222, 87545-80274

No comments:

Post a Comment